ஊரடங்கை உதாசீனப்படுத்திய பொதுமக்களை வீட்டில் முடங்க வைத்த கத்திரி வெயில்

ஊரடங்கை உதாசீனப்படுத்திய பொதுமக்கள், தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டிற்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Update: 2020-05-26 03:32 GMT
திருச்சி, 

ஊரடங்கை உதாசீனப்படுத்திய பொதுமக்கள், தற்போது சுட்டெரிக்கும் வெயிலால் வீட்டிற்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கந்தக பூமி திருச்சி

தமிழகத்தின் மையப்பகுதியாகவும், தமிழகத்தின் இரண்டாம் தலைநகராகவும் விளங்கி வருவது திருச்சி. ஆன்மிகம், கல்வி, விவசாயம் மற்றும் சுற்றுலா தலம் என சிறப்பு பெற்றிருந்தாலும் கந்தக பூமி என்ற ஒரு அந்தஸ்தையும் திருச்சி பெற்றுள்ளது.

ஏனென்றால், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து கொண்டிருந்தாலும் திருச்சியில்தான் மழையின் அளவு வெகுகுறைவாகவே இருக்கும். மேலும் எவ்வளவு மழை பெய்தாலும் மறுநாள் அதன் சுவடே இல்லாத நிலை காணப் படும்.

கொரோனாவால் பாதிப்பு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 4 கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதிவரை நீடிக்கிறது. கொரோனா தாக்கத்தால் விவசாயிகள், வணிகர்கள், தொழிற்சாலை அதிபர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், சாலையோர வியாபாரிகள் என அனைவருமே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஊரடங்கில் இருந்து 50 சதவீதம் வரை தளர்வுகள் அரசால் அறிவிக்கப்பட்டாலும், இன்னமும் போக்குவரத்து சேவையான பஸ், ரெயில், விமானங்கள் தமிழகத்தில் இயங்கவில்லை. போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டால்தான் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்ப முடியும். ஊரடங்கில் வீட்டில் இருந்தவர்கள் அதைமீறி வீதியில் முக கவசங்கள் இன்றி உலா வந்தனர். போலீசாரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும் பொதுமக்கள் அடங்க மறுத்தே வந்தனர்.

சுட்டெரிக்கும் வெயில்

இந்த நிலையில் திருச்சியில் சுட்டெரிக்கும் வகையில் வெயில் கொடுமை அதிகமாகி விட்டது. ஊரடங்கை மீறி சாலையில் வலம் வந்த இளைஞர் கூட்டமெல்லாம் தற்போது வெயிலின் தாக்கத்தால் வீட்டிற்குள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் மாலை 3 மணிவரை திருச்சி மாநகரில் வாகனங்களின் போக்குவரத்து வெகுவாகவே குறைந்து விட்டது.

இந்த மாதம் 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் கொடுமை தாக்க தொடங்கியது. 28-ந் தேதிவரை அது நீடிக்கிறது. அக்னி நட்சத்திரம் முடிய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் திருச்சி மாநகரில் கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 6-ந் தேதி 106 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று முன்தினம் 108.5 டிகிரி வெயில் அதிகபட்சமாக திருச்சியில் பதிவாகி உள்ளது.

அனல் காற்று

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலையில் வெயில் கொடுமையை சமாளிக்க ஹெல்மெட் அணிந்தும், நடந்து சென்றவர்கள் குடைபிடித்தபடியும், பெண்கள் சிலர் துப்பட்டா, புடவை முந்தானையை தலையில் போர்த்தியபடியும் செல்வதை காண முடிந்தது. 2 சக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. நடந்து செல்வோரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து விட்டது. வீட்டிற்குள் கடும் வெப்ப அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் திருச்சி சாலைகளில் மக்கள் அதிகளவில் காணப்பட்டனர். தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டனர். இதற்கு ஊரடங்கு காரணமில்லை. சுட்டெரிக்கும் கத்திரி வெயில் தான் காரணம் என்று கூறப்படுகிறது. வீட்டில் மின்விசிறியை போட்டாலும் அனல் காற்றாகத்தான் வருகிறது. அதே வேளையில் சற்று வசதியானவர்கள் ஏ.சி.யை போட்டுக்கொண்டு வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

வெளியில் செல்வதில்லை

சாலையில் 2 சக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கையும், நடந்து செல்வோரின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்து விட்டது. தற்போது அத்தியாவசிய பணிகள் தவிர மற்ற பணிகளுக்கு யாரும் வெளியில் செல்வதில்லை. இதனால் திருச்சியில் அறிவிக்கப்படாத ஊரடங்கு அமலில் இருப்பது போல உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்