பல்லடத்தில் பலத்த மழை: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் காயம்

பல்லடத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 பேர் காயம் அடைந்தனர்.;

Update: 2020-05-26 03:15 GMT
பல்லடம்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வந்தனர். ஊரடங்கு காரணமாகவும், வெயிலின் தாக்கத்தாலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கினர். மேலும் இளநீர், குளிர்பானம் உள்ளிட்ட பொருட்களை விரும்பி வாங்கி உபயோகித்து வந்தனர்.

இந்த நிலையில் பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பகலில் வழக்கத்தைவிட அதிகமான வெயில் அடித்தது. ஆனால் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. மாலை 6 மணி அளவில் சாரல் மழையுடன் தொடங்கி 1 மணி நேரம் வரை பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேற்கூரை இடிந்து விழுந்தது

இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ஊராட்சி, கிழக்கு ராசாகவுண்டன்பாளையம் பகுதியில் நேற்று வீசிய பலத்த சூறைகாற்று மழைக்கு அங்குள்ள கணேசன்(வயது 55) என்பவரது வீட்டின் சிமெண்ட் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்த கணேசன், அவரது மனைவி கலாமணி(50), உறவுக்கார குழந்தை ஸ்ரீகா(4) ஆகியோர் காயம் அடைந்தனர். மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டனர். இது குறித்து பல்லடம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டனர். அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

பல்லடம்-திருப்பூர் ரோட்டில் மகாலட்சுமி நகர், அருள்புரம் பகுதிகளில் சாலையோரம் இருந்த மரங்கள் சூறைக்காற்றில் வேரோடு சாய்ந்து விழுந்தன. ரோட்டின் குறுக்கே மரங்கள் விழுந்ததால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றினர்.

இதே போல அருள்புரம் பகுதியில் மின்கம்பம் சாய்ந்து தனியார் நிறுவன வேன் மீது விழுந்தது. மின்தடை காரணமாகவும், வேனில் பயணிகள் யாரும் இல்லாததாலும் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் இல்லை.

திருப்பூர்

திருப்பூரில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் கொளுத்தியது. மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்று வீசியது. மாலை 5.45 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை கொட்டித்தீர்த்தது. முருகம்பாளையம், இடுவம்பாளையம், மங்கலம், மண்ணரை, அவிநாசி ரோடு, குமரன் ரோடு, ராயபுரம் பகுதிகளில் 45 நிமிடம் நேரமாக மழை பெய்தது. பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சந்தைப்பேட்டை பகுதிகளில் பல மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மாநகரின் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலைகளில் கிடந்தது. கோடை வெயிலால் சிரமத்தை அனுபவித்த திருப்பூர் மக்கள் நேற்று பெய்த மழையால் குளிர்ச்சி அடைந்தனர். பெருமாநல்லூர் பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்தது.

மேலும் செய்திகள்