மராட்டிய மாநிலத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் 189 பேர் நெல்லை வந்தனர்

மராட்டிய மாநிலத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் 189 பேர் நெல்லை வந்தனர்.

Update: 2020-05-26 02:31 GMT
நெல்லை, 

மராட்டிய மாநிலத்தில் இருந்து சிறப்பு ரெயிலில் 189 பேர் நெல்லை வந்தனர்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்கள் வடமாநிலங்களில் சிக்கி உள்ளனர். மேலும் சுற்றுலா சென்றவர்கள், படிப்புக்காக வெளி மாநிலங்கள் சென்றவர்களும் தவித்து வருகிறார்கள். அவர்களை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது.

எந்தெந்த ஊரை சேர்ந்தவர்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு, அவர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஏற்கனவே டெல்லி, மும்பையில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் நெல்லைக்கு வந்தனர். அவர்களுக்கு கொரோனா உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு நேற்று ஒரு சிறப்பு ரெயில் வந்தது. அந்த ரெயிலில் மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்தவர்கள் வந்தனர்.

189 பேர்

அவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டனர். அதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 123 பேர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 27 பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 22 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர், கோவையை சேர்ந்த 5 பேர், திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர், மதுரையை சேர்ந்த 3 பேர், விருதுநகரை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 189 பேர் நெல்லையில் வந்து இறங்கினார்கள்.

வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள், அவர்களது மாவட்டத்திற்கு செல்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பஸ்கள் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த பஸ்களில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

மருத்துவ பரிசோதனை

நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு பஸ்கள் மூலம் நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகிறார்கள். தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால், வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

மேலும் செய்திகள்