6 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிகிறது: நாகர்கோவில் கோர்ட்டில் காசி இன்று மீண்டும் ஆஜர்
6 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைவதால், நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காசியை போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள்.
கன்னியாகுமரி,
6 நாள் போலீஸ் காவல் விசாரணை முடிவடைவதால், நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காசியை போலீசார் ஆஜர்படுத்துகிறார்கள்.
காசி மீது புகார்கள்
நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி (வயது 26). இவர் மீது பெண் டாக்டர் உள்பட பல பெண்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினர். பெண் டாக்டர் தான் இவர் மீது முதலில் புகார் கொடுத்தார். அதில், தன்னுடன் நெருங்கி பழகிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றம்சாட்டினார். இதனையடுத்து போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து இவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில பெண்கள் துணிச்சலாக புகார் கொடுத்தனர். இதற்கிடையே பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும், காசியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்த நண்பர் டேசன் ஜினோவை கைது செய்தனர். வெளிநாட்டில் இருக்கும் நண்பரும் காசிக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
காவல் விசாரணை முடிகிறது
இதற்கிடையே காசி மீது 17 வயது சிறுமி கொடுத்த புகாரின் பேரில், கன்னியாகுமரி மகளிர் போலீசார் அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர். பின்னர் காசியிடம் 6 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தொடர்ச்சியாக 5 நாட்கள் காசியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) முடிகிறது. இதனால் இன்று காலையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காசியை கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.