நீடாமங்கலம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
நீடாமங்கலம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் பகுதியில் ஆற்று மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.
மணல் கொள்ளை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே பெரிய வெண்ணாறு உள்ளது. இந்த ஆற்றில் இருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு என 3 ஆறுகள் தனித்தனியாக பிரிந்து விவசாய பாசனத்துக்கு தண்ணீர் செல்கிறது. இந்த ஆறுகள் மூலமாக திருவாரூர், நாகை மாவட்ட விவசாயிகள் பெரும் பயன் அடைகின்றனர். தற்போது ஆறுகளில் தண்ணீர் இல்லை.
இந்த சூழ்நிலையில் நீடாமங்கலம் பகுதியில் பெரியவெண்ணாறு, வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய ஆறுகள் செல்லும் வாசுதேவமங்கலம், ஒளிமதி, பெரம்பூர், வெள்ளங்குழி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 மாதங்களில் ஆற்று மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.
விவசாயிகள் கவலை
ஆறுகளில் இருந்து லாரிகள், டிராக்டர்கள், மினிலாரிகள் மூலம் மணல் எடுத்து செல்லப்படுகிறது. இது தவிர ஆற்றின் கரைப்பகுதிகளில் வசித்து வருபவர்களை கொண்டு சிமெண்டு சாக்குகளில் மணல் அள்ளப்பட்டு மொபட்டுகள் மூலம் கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மணல் அள்ளிய பகுதிகள் ஆறுகளில் பெரிய பள்ளங்களாக காட்சி அளிக்கின்றன. ஆற்றினுள் மணல் அள்ள வாகனங்கள் சென்ற பகுதி தனி சாலை போல் தோற்றம் அளிக்கிறது. மணல் கொள்ளையால் மேட்டூர் அணை திறந்தால் ஆறுகளில் வரும் தண்ணீர் விவசாயத்துக்கு பயன்படும் வகையில் வயல்களுக்கு செல்லுமா? என்ற சந்தேகம் எழுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எதிர்பார்ப்பு
ஊரடங்கு அமலில் உள்ள நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தண்டிப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்றவற்றில் ஆர்வம் காட்டும் காவல்துறை மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.