கோவையில் எந்திரம் மூலம் தண்டவாளங்கள் பராமரிப்பு

ஊரடங்கினால் ரெயில்கள் ஓடாத சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கோவையில் எந்திரம் மூலம் தண்டவாளங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

Update: 2020-05-25 23:29 GMT
கோவை,

தண்டவாளங்கள் அமைக்கும் போது, பல அடுக்குபோட்டு கருங்கல் ஜல்லிகளை போட்டு அதன் மீது ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுவது வழக்கம். தண்டவாளம் மீது ரெயில்கள் ஓடும் போது அவற்றின் எடை மற்றும் வேகம் காரணமாக தண்டவாளத்தின் கீழ் உள்ள கருங்கல் ஜல்லிகள் உடைந்து மாவு போல் ஆகி விடும். மேலும் வெயில் மற்றும் மழை போன்ற எல்லா காலநிலையிலும் கருங்கல் ஜல்லிகள் கிடப்பதால் அவற்றின் வலிமை குறைந்து தண்டவாளம் சற்று ஏற்றத் தாழ்வுடன் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தண்டவாளம் சமமாக இல்லாமல் இருப்பதால் ரெயில்கள் ஓடும்போது பெட்டிகள் சீராக ஓடாது. ஏற்றத் தாழ்வுடன் அவை ஓடும்.

இதனால் தான் ரெயில் தண்டவாளத்தில் உள்ள கருங்கல் ஜல்லிகளை பணியாளர்கள் அடிக்கடி மேலும் கீழுமாக மாற்றும் பணியை செய்வார்கள். இந்த பணியை ஆட்களை கொண்டும் செய்யலாம். நவீன எந்திரம் மூலமாகவும் செய்யலாம்.

சாத்தியமில்லை

எப்போதும் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும் ரெயில் பாதையில் எந்திரத்தை கொண்டு தண்டவாளத்தை பராமரிக்க முடியாது. ஆட்களை கொண்டு தான் அந்த பணிகள் செய்யப்பட்டு வந்தன. ஏனென்றால் ரெயில் என்ஜின் போன்று இருக்கும் அந்த எந்திரத்தை தண்டவாளத்தில் நிறுத்தி தான் அந்த பணியை செய்ய முடியும். ஆனால் அடிக்கடி ரெயில்கள் வந்து செல்லும் கோவை மார்க்கத்தில் இது சாத்தியமில்லாமல் இருந்து வந்தது.

தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக பயணிகள் ரெயில் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டன. சரக்கு ரெயில்கள் மட்டும் தான் இயக்கப்படுகின்றன. இதுபோன்று ரெயில்கள் இயக்கப்படாத நேரத்தில் தான் இத்தகைய நவீன எந்திரம் மூலம் தண்டவாளங்களை பராமரிக்க முடியும்.

பராமரிப்பது எப்படி?

இந்த எந்திரம் செயல்படுவது குறித்து ரெயில்வே என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:-

ரெயில் என்ஜின் போன்று காணப்படும் இந்த நவீன எந்திரம் ஒரு ரெயில்வே கோட்டத்துக்கு ஒரு எந்திரம் தான் ஒதுக்கப்படும். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த எந்திரம் முழுக்க முழுக்க கணினியால் இயங்க கூடியது. தண்டவாளத்தின் மீது மெதுவாக இயக்கப்படும் இந்த எந்திரத்தின் முன்பகுதி 10 அடி தூரத்துக்கு தண்டவாளத்தை அப்படியே சில அங்குலம் உயரத்துக்கு தூக்கும். அப்போது எந்திரத்தின் பின்பகுதியில் ஹைட்ராலிக் அழுத்தத்தினால் இயங்கும் கருவிகள் தண்டவாளத்தின் அடியில் சென்று அதிக அழுத்தத்துடன் அதிர்வுகளை கொடுக்கும். அப்போது தண்டவாளத்தின் மேலே உள்ள கருங்கற்கள் கீழே சென்று விடும். தண்டவாளத்தின் அடியில் இடைவெளி இருந்தாலும் கருங்கற்கள் சென்று அவற்றை நிரப்பி விடும். இந்த எந்திரம் மூலம் தண்டவாளத்தை பராமரித்த பின்னர் ரெயில்கள் எந்த அதிர்வுகளும் இல்லாமல் செல்லும். ஒரு மணி நேரத்தில் 2 கிலோ மீட்டர் நீளத்துக்கு தண்டவாளம் பராமரிக்கப்படும்.

தற்போது ஊரடங்கு காரணமாக ரெயில்கள் ஓடாததால் நவீன எந்திரம் மூலம் தண்டவாளத்தை பராமரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக தற்போது ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால் தண்டவாளத்தை சீரமைக்க இந்த எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்