அலையில் சிக்கிய வாலிபர் உள்பட 2 பேர் சாவு

மரக்காணம் கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய வாலிபர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-05-25 23:10 GMT
மரக்காணம்,

மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் மோகன் (வயது 23). சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கொரோனாவால் கம்பெனியில் கட்டாய விடுமுறை விடப்பட்டதையொட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன் மோகன் ஊருக்கு வந்தார்.

நேற்று முன்தினம் மாலை மோகன், தனது நண்பரான முருகவேல் (17) உள்பட 5 பேருடன் மரக்காணம் கடற்கரைக்கு சென்றார். அங்கு அவர்கள் கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அலையில் சிக்கியதில் மோகனும், முருகவேலும் கடலுக்குள் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு மாயமாகினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மற்ற நண்பர்கள் மீனவர்களுக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார், தீயணைப்புத்துறை, கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் படகு மூலமாக கடலில் மூழ்கிய மோகன், முருகவேலை நீண்ட நேரமாக தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இரவு நேரமாகிவிட்டதால் தேடும்பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலை முட்டுக்காடு குப்பம் கடற்கரையில் மோகன், முருகவேல் ஆகியோரது உடல்கள் கரை ஓரமாக ஒதுங்கியது. இதைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று மோகன், முருகவேல் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுதொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்