பிரசவித்த மனைவியை வீட்டுக்கு அனுப்ப மறுத்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளி
பிரசவித்த மனைவியை வீட்டுக்கு அனுப்ப மறுத்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொழிலாளி அடித்து நொறுக்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பனந்தாள்,
பிரசவித்த மனைவியை வீட்டுக்கு அனுப்ப மறுத்ததால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொழிலாளி அடித்து நொறுக்கினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரசவத்திற்காக அனுமதி
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருக்கோடிக்காவல் கிராமத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகன் அய்யப்பன்(வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்காக திருப்பனந்தாளை அடுத்த துகிலியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 23-ந் தேதி ரேகா அனுமதிக்கப்பட்டார்.
அடித்து நொறுக்கினார்
கடந்த 24-ந் தேதி காலை ரேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அன்று இரவு அய்யப்பன், குடிபோதையில் சுகாதார நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த அவர் தனது மனைவி ரேகாவிடம் தகராறு செய்தார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கடும் ஆத்திரம் அடைந்த அய்யப்பன் தனது மனைவி ரேகாவை மருத்துவமனையில் இருந்து உடனடியாக டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும் என பணியில் இருந்த செவிலியரிடம் கேட்டார்.
அதற்கு செவிலியர், இப்போது டிஸ்சார்ஜ் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த அய்யப்பன், சுகாதார நிலையத்தில் உள்ள கதவு கண்ணாடி மற்றும் அங்கிருந்த நாற்காலி, மேஜைகளை அடித்து நொறுக்கினார்.
போலீசார் விசாரணை
இதில் கையில் காயம் ஏற்பட்ட அய்யப்பனை, அந்த பகுதியில் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர்.
இது குறித்து சுகாதார நிலைய டாக்டர் கலாநிதி, பந்தநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.