நெல்லை - தென்காசி மாவட்டத்தில் வீடுகளில் ரம்ஜான் தொழுகை நடத்திய முஸ்லிம்கள்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் ரம்ஜான் தொழுகை நடத்தினர்.;
தென்காசி,
இஸ்லாமியர்களின் புனித திருநாளான ரம்ஜான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வழக்கமாக இந்த பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவார்கள். அதற்கு முன்னதாக ஒரு மாதம் நோன்பு கடைபிடிப்பார்கள். இஸ்லாத்தின் புனித கடமைகளில் ஒன்றான ஏழைகளுக்கு பொருட்களை வழங்குவார்கள்.
எனவே இதனை ஈகைத்திருநாள் என்று கூறப்படுகிறது.
ஒருமாத நோன்பிற்கு பிறகு ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பொது இடத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி தொழுகை நடத்துவார்கள். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பினால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.
எனவே நேற்று முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் தொழுகை நடத்தினார்கள்.
வீடுகளில் தொழுகை
நெல்லையில் மேலப்பாளையம், நெல்லை டவுன், பேட்டை உள்ளிட்ட இடங்களில் ரம்ஜான் தொழுகை நேற்று காலை நடந்தது. இஸ்லாமியர்கள் வீட்டுக்குள்ளே தொழுகை நடத்தினர். சிலர் வீட்டின் மொட்டை மாடியில் சமூக இடைவெளி விட்டு ரம்ஜான் தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இதேபோல் தென்காசி மாவட்டம் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், அச்சன்புதூர், சங்கரன்கோவில், புளியங்குடி, வாசுதேவநல்லூர், சிவகிரி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் இந்த தொழுகை நடைபெற்றது.