மதுரை மாவட்ட குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று கூடுதல் தண்ணீர் திறப்பு
மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து இன்று முதல் 3 நாட்களுக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அமைந்துள்ளது. இந்த அணையில் நேற்று நீர்மட்டம் 41.98 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து மதுரை மாநகரம் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
கோடை காலம் என்பதால் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த உறைகிணறுகளில் நீர்மட்டம் உயர வைகை அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற அரசு வைகை அணையில் உறைகிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இன்று தண்ணீர் திறப்பு
அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி முதல் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து 3 நாட்களில் மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்பட உள்ளது. முதல் நாள் வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதமும், 2-வது நாள் வினாடிக்கு 850 கனஅடி வீதமும், 3-வது நாள் வினாடிக்கு 300 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படும்.இந்த தண்ணீரின் மூலம் மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. 3 நாட்கள் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், அணையின் நீர்மட்டம் அடுத்த 3 நாட்களில் 5 அடி வரை குறையும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.