பள்ளிகள் திறந்து 2 வாரத்திற்கு பின் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்த வேண்டும் தி.மு.க. இளைஞரணி மனு
பள்ளிகள் திறந்து 2 வாரத்திற்குபின் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு நடத்த வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தி.மு.க. இளைஞரணி மனு அளித்தனர்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நாகனி செந்தில்குமார் தலைமையில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துஷாந்த் பிரதீப்குமார், ரவி, சேதுபதிராஜா, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராஜ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:- கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவதற்கு முன்பு தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் முகாம்களாக பள்ளிகள் செயல்பட்டு வருவதால் அவற்றை பயன்படுத்தும் மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரத்திற்குபின் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.