ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்கக்கோரி பெண்கள் கடல் முறையீடு போராட்டம்
ஈரானில் தவிக்கும் மீனவர்களை மீட்கக்கோரி ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் பெண்கள் கடல் முறையீடு போராட்டம் நடத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடியை சேர்ந்த 16 மீனவர்கள் உள்பட 22 பேர் கடந்த ஆண்டு ஈரான் நாட்டிற்கு மீன்பிடி தொழிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் பல்வேறு தீவுகளில் தங்கி மீன்பிடித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவியதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் மீன்பிடிக்க செல்லாமலும், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமலும் அவர்கள் பரிதவித்து வருகின்றனர். மேலும் கையில் வைத்திருந்த பணம் செலவாகிவிட்டதால் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்திய மீனவர்களை மீட்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது ஈரானில் தவிக்கும் இந்திய மீனவர்களை மீட்க தனி கப்பல் ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் கப்பல் கட்டணத்தை மீனவர்களே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் சொந்த ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள திருப்பாலைக்குடியை சேர்ந்த பெண்கள் ஈரான் நாட்டில் பரிதவிக்கும் மீனவர்களை மீட்க வலியுறுத்தி கடல் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் மீனவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் திரளாக கலந்து கொண்டனர். போராட்டத்திற்கு தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க தலைவர் வக்கீல் தீரன்திருமுருகன் தலைமை தாங்கினார்.
இதில் ஈடுபட்ட பெண்கள் திருப்பாலைக்குடி காந்திநகர் காளியம்மன் கோவில் பகுதியில் கடலை நோக்கி அமர்ந்து தங்களது குடும்பத்தினர் விரைவில் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று முறையிட்டு கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.