வைகை, இன்டர்சிட்டி உள்ளிட்ட 4 ரெயில்களை இயக்க முடிவு: பெட்டிகளில் இருக்கை ஒதுக்கீடு எவ்வாறு இருக்கும்?
வைகை, இன்டர் சிட்டி உள்ளிட்ட 4 ரெயில் களை இயக்குவது தொடர்பாகவும், அந்த ரெயில்களில் இருக்கை ஒதுக்கீடு எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாகவும் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு உள்ளது. இதன் காரணமாக பஸ், ரெயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதனால் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் மக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சொந்த ஊரை விட்டு வேறு மாநிலங்களுக்கு சென்று வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்கள் ஊர் திரும்ப முடியாமல் நடந்து செல்லும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனை போக்க புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி முதல் ரெயில் போக்குவரத்தை குறிப்பிட்ட இடங்களில் மட்டும் தொடங்க அரசு அனுமதி அளித்தது அதில் முதல்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரெயில்களுக்கான முன்பதிவு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் அவ்வாறு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் தமிழகத்திற்கு எதுவும் இல்லை என்று தெரியவந்தது.
இதனால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தமிழகத்திலும் ரெயில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்தது. சென்னையை தவிர்த்து தமிழகத்தில் ரெயில் போக்குவரத்தை படிப்படியாக தொடங்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
4 ரெயில்கள்
அதன்படி தென்னக ரெயில்வே தமிழகத்தில் எங்கெங்கு ரெயில் போக்குவரத்தை தொடங்கலாம் என்று ஆலோசனை நடத்தியது. அதில் தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 4 வழித்தடங்களில் ஏ.சி. வசதி இல்லாத 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்கலாம் என்று ரெயில்வே வாரியத்திற்கு தென்னக ரெயில்வே கோரிக்கை விடுத்தது.
அந்த வகையில் கோவை-மயிலாடுதுறை இடையேயான ஜன்சதாப்தி ரெயிலையும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை இன்டர்சிட்டி ரெயிலாக மதுரை-விழுப்புரம் இடையேயும், திருச்சி-நாகர்கோவில் மற்றும் கோவை-காட்பாடி இடையே இன்டர்சிட்டி ரெயில்களையும் இயக்க அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் விரைவில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்று தெரியவருகிறது. ஆனால் தமிழகத்தில் ரெயில்கள் இயக்குவது குறித்து ரெயில்வே வாரியம் முடிவு எடுத்து தென்னக ரெயில்வேக்கு தெரிவித்த பிறகுதான் அதுபற்றி உறுதியாக தெரியவரும். அதன் பிறகுதான் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட ஆயத்த பணிகள் தொடங்கும்.
பல்வேறு சந்தேகங்கள்
மேலும் டிக்கெட் எடுத்து விட்டால் சம்பந்தப்பட்ட பயணிகளுக்கான விதிமுறைகள் என்னென்ன, அரசின் இ-பாஸ் பெற வேண்டுமா, மருத்துவ பரிசோதனை, இருக்கைகள் ஒதுக்கீடு எவ்வாறு இருக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் தீர்வு கண்ட பின்னரே ரெயில்வே நிர்வாகம் முன்பதிவை தொடங்கும்.
இதற்கிடையில் ரெயில் போக்குவரத்து தொடங்குவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை தீவிரப்படுத்தும்படி மதுரை கோட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களுக்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ரெயில் நிலைய அதிகாரி விளக்கம்
இதுகுறித்து மதுரை ரெயில் நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “ரெயில்கள் இயக்கப்படுவது குறித்து எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. ரெயில்களை இயக்குவதற்கான அனுமதியை ரெயில்வே வாரியம் வழங்கிய பிறகுதான், ரெயில்கள் எப்போது இயக்கப்படும் என்பது தெரியவரும். மேலும் டிக்கெட் கவுண்ட்டர் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் பயணிகள் மதுரையில் இருந்து வெளியூருக்கு செல்வதற்கான அனுமதி மற்றும் யார்-யாருக்கு டிக்கெட் வழங்கலாம் என்று அரசு அறிவித்த பிறகுதான் தெரியவரும். உட்கார்ந்து செல்லும் வசதி கொண்ட பெட்டிகளில் இருக்கைகளில் சமூக இடைவெளியை பின்பற்றியே பயணிகள் அமர வைக்கப்படுவார்கள். அவர்களுக்கான ஒதுக்கீடு குறித்து ரெயில்வே நிர்வாகம் விரைவில் தெரிவிக்கும். அதை பொறுத்துதான் ஒரு ரெயிலில் எத்தனை பேர் பயணிக்கலாம் என்பதை கூற முடியும். தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் தற்போதைய நிலையில் நடு படுக்கை இருக்காது என்றே தெரிகிறது” என அவர் விளக்கம் அளித்தார்.