கொரோனா பாதித்ததாக கூறப்பட்ட டாக்டருக்கு வைரஸ் தொற்று இல்லை மீண்டும் நடந்த பரிசோதனையில் தெரியவந்தது

கொரோனா பாதித்ததாக கூறப்பட்ட மூடிகெரேயை சேர்ந்த டாக்டருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது.

Update: 2020-05-23 22:15 GMT
சிக்கமகளூரு,

கொரோனா பாதித்ததாக கூறப்பட்ட மூடிகெரேயை சேர்ந்த டாக்டருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இதனால் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவை சேர்ந்தவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக வேலைப்பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து டாக்டர் சிகிச்சைக்காக அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அந்த டாக்டர் கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் என 300-க்கும் மேற்பட்டவர்கள் தனிமை கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் டாக்டருக்கு யாரிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை கண்டுபிடிப்பதில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது ரத்தம், சளி மாதிரிகளை எடுத்து மீண்டும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி அவரது ரத்தம், சளி மாதிரி சேகரித்து ஹாசன், சிவமொக்கா, பெங்களூருவில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என வந்துள்ளது.

இதுகுறித்து சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம் கூறியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடிகெரேயில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தோம். ஆனால் அதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அவரின் சளி, ரத்தம் மாதிரியை எடுத்து 3 ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்தோம். அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் டாக்டர் வீட்டுக்கு அனுப்பப்பட்டு உள்ளார்.

மேலும் அவரிடம் சிகிச்சை பெற்றவர்களும், தொடர்பில் இருந்தவர்களும் என 300-க்கும் மேற்பட்டோரும், அவர்களின் வீட்டிற்கு அனுப்படுகிறார்கள். டாக்டருக்கு முதலில் எப்படி கொரோனா பாதிப்பு இருப்பது என்பது கண்டறியப்பட்டது என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்