நாகை மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-22 23:57 GMT
நாகப்பட்டினம், 

நாகை மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு செல்வராஜ் எம்.பி. தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. நாகை மண்டல பொதுச்செயலாளர் கோபிநாதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும். ஊரடங்கால் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதித்த கூலித் தொழிலாளர்களின் குடும்ப அட்டைக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தொழிலாளர் உரிமைகளை பறிக்கும் அவசர சட்டத்தை ஏற்றக்கூடாது. 8 மணிநேர வேலையை 12 மணி நேரமாக நீட்டித்ததை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம்

இதேபோல் நாகை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் முருகையன், தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேதாரண்யம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்க கிளை செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குத்தாலம்

மயிலாடுதுறையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் பேரவை மாநில பொதுச்செயலாளர் காளிமுத்து, சி.ஐ.டி.யூ. மத்திய சங்க துணை தலைவர் ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்கடையூர்

திருக்கடையூரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு இந்திய தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட கட்டுமான சங்க செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை தலைவர் லட்சுமணன், தொழிற்சங்கத்தை சேர்ந்த மார்க்ஸ், சரவணன், செல்வம், அமுல் காஸ்ட்ரோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்