பெங்களூருவில் நாளை முழு ஊரடங்கு அமல் மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் எச்சரிக்கை

பெங்களூருவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், மக்கள் தேவையில்லாமல் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் எச்சரித்துள்ளார்.

Update: 2020-05-22 22:15 GMT
பெங்களூரு,

பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக நாட்டில் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. 4-ம் கட்ட ஊரடங்கில் பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டு இருக்கிறது. வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கில் தளர்வு இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு மாநிலத்தில் அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் வருகிற 24-ந் தேதி (நாளை) பெங்களூருவில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.

இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட 1-வது மற்றும் 2-வது கட்ட ஊரடங்கின் போது விதிக்கப்பட்ட அனைத்து விதிமுறைகளும் அமலில் இருக்கும். பெங்களூருவில் நாளை (அதாவது இன்று) இரவு 7 மணியில் இருந்து வருகிற 25-ந் தேதி காலை 7 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

முழு ஊரடங்கு காரணமாக நகரில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்படும். நகர் முழுவதும் 24-ந் தேதி (நாளை) போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் தேவையில்லாமல் சுற்றி திரிய வேண்டாம். ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றினால், அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயங்காது. பால், காய்கறி, மருந்துகடைகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் கிடைக்கும். இறைச்சி கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் தங்களது சொந்த வாகனங்களில் சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கலாம். இதையே காரணம் காட்டி தேவையில்லாமல் சுற்றி திரிய கூடாது. அரசின் உத்தரவை நாம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கின் போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் முருகன், சவுமேந்த் முகர்ஜி ஆகிய 2 பேரும் உடன் இருந்தார்கள்.


மேலும் செய்திகள்