மதுரை அருகே வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; நாய் தலை சிதறி சாவு ஒருவர் கைது

வீட்டில் 4 வெடிகுண்டுகள் வீசப்பட்டன. அதில் ஒரு குண்டை கடித்த நாய் தலை சிதறி செத்தது.

Update: 2020-05-22 04:23 GMT
அலங்காநல்லூர், 

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே ராமகவுண்டன்பட்டியை சேர்ந்தவர், சசிகுமார். அவருடைய மனைவி செல்வராணி (வயது 35). இவருடைய தம்பி முருகன்(30). இவர் அதே ஊரை சேர்ந்த சின்னத்துரை(55) என்பவருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். பின்னர் இவர்கள் செல்வராணி வீட்டிற்கு சென்று தகராறு செய்தனர்.

இதை செல்வராணி கண்டித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை தனது வீட்டில் வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்து செல்வராணி வீட்டின் முன்பு சரமாரியாக வீசியதாக தெரியவருகிறது.

நாய் தலைசிதறி சாவு

அதில் ஒரு குண்டு வெடித்து சிதறியது. மற்ற 3 வெடிகுண்டுகள் வெடிக்கவில்லை. இந்தநிலையில் அதில் ஒரு வெடிகுண்டை செல்வராணி வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்துள்ளது. அப்போது அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் தலை சிதறி அந்த நாய் பரிதாபமாக இறந்தது. மீதமுள்ள 2 நாட்டு வெடிகுண்டுகள் அதே இடத்தில் கிடந்தன.

இதுபற்றி உடனடியாக பாலமேடு போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் வெடிக்காமல் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகளையும் கைப்பற்றினர். சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் பாலமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர். சின்னத்துரையை வலைவீசி தேடி வருகின்றனர்.

சின்னத்துரை எங்கிருந்து நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்தார்? என்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்