திருவையாறு அருகே ஓய்வு பெற்ற அதிகாரி மனைவியிடம் 13 பவுன் சங்கிலி பறிப்பு மர்ம நபருக்கு வலைவீச்சு
திருவையாறு அருகே ஓய்வு பெற்ற அதிகாரி மனைவியிடம் 13 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
திருவையாறு,
திருவையாறு அருகே ஓய்வு பெற்ற அதிகாரி மனைவியிடம் 13 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வு பெற்ற அதிகாரி
தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள ராஜேந்திரம் ஆற்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் கருணாகரன். இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தில் உதவி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இந்திராகாந்தி (வயது56) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கிரில் கேட்டை பூட்டி விட்டு வீட்டு வாசல் கதவை திறந்து வைத்துக்கொண்டு இந்திராகாந்தி வீட்டு முன்பக்க வளாகத்தில் உள்ள கட்டிலில் தூங்கி கொண்டிருந்தார். அவருடைய அருகில் ஒரு மகனும், வேறு ஒரு அறையில் மற்றொரு மகனும், மாடியில் கருணாகரனும் தூங்கி கொண்டிருந்தனர்.
வீடு புகுந்த மர்ம நபர்
நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கிரில் கேட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தார். அவர் கட்டிலில் தூங்கி கொண்டிருந்த இந்திராகாந்தியின் கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனால் தூக்கத்தில் இருந்து பதறி அடித்துக்கொண்டு எழுந்த இந்திராகாந்தி கூச்சல் போட்டார்.
அக்கம்பக்கத்தில் இருந்து ஆட்கள் வருவதற்குள் அந்த மர்ம நபர் தங்க சங்கிலியுடன் வீட்டுக்கு எதிரே உள்ள வயல்வெளி வழியாக தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, நடுக்காவேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், நெடுஞ்செழியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.
வீட்டில் இருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு சென்ற நாய் எதிரே உள்ள வயல்வெளியில் சிறிது தூரம் ஓடி விட்டு பின்னர் அங்கேயே படுத்துக்கொண்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதுகுறித்து நடுக்காவேரி போலீசில் இந்திராகாந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலி பறித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.