பொன்னேரி அருகே புதிய தொழில்நுட்பத்தில் நெல் விதைப்பு - வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டனர்

பொன்னேரி அருகே 10 கிலோ விதை மூலம் புதிய தொழில்நுட்பமான டிரம்சீடர் என்ற கருவியை கொண்டு நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2020-05-21 23:00 GMT
பொன்னேரி, 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த இலுப்பாக்கம் கிராமத்தில் சொர்ணவாரி பட்டத்திற்காக விவசாயிகள் தங்களது நிலங்களை உழுது வருகின்றனர். ஆனால் உழவுப்பணி, நாற்றங்கால் தயாரிப்பு உள்பட பல்வேறு விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் வராததால் நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகள் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகளின் ஆலோசனைகளை விவசாயிகள் பெற்றனர்.

பின்னர் புதிய தொழில்நுட்பத்துடன் நெல் விதைப்பு செய்ய முடிவு செய்தனர். நாற்றங்கால் முறைக்கு ஒரு ஏக்கருக்கு 30 கிலோ நெல் விதை தேவைப்படும் நிலையில் 10 கிலோ விதை மூலம் புதிய தொழில்நுட்பமான டிரம்சீடர் என்ற கருவியை கொண்டு நேரடி நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சம்பத்குமார், மீஞ்சூர் வட்டார உதவி இயக்குனர் ஜீவராணி மற்றும் வேளாண்மை அதிகாரிகள் விதைப்பு பணிகளை பார்வையிட்டு புதிய தொழில்நுட்பத்தில் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்ட விவசாயிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினர்.

மேலும் அவர்கள் கூறும்போது:-

நெல் பயிருக்கு உரங்கள் இடும்போதும், நீர் பாசனம் செய்யும்போதும் பாசிகள் அதிக அளவில் தோன்றும். அப்போது நெல்பயிருக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் காற்றோட்டம் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறது. நீர்ப்பாசனம் செய்யும்போது ஒரு ஏக்கருக்கு 2 கிலோ காப்பர்சல்பேட் கலந்து பாசியை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்