கும்பகோணத்தில் பயங்கரம்: காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை தந்தை- மகன் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
கும்பகோணத்தில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கும்பகோணம்,
கும்பகோணத்தில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காய்கறி வியாபாரி
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலையபேட்டை மாங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்(வயது55). காய்கறி வியாபாரி. இவரது மைத்துனர் மணி. இவருடைய மகன்கள் அபினேஷ், அஜய். சம்பவத்தன்று அபினேஷ், அஜய் ஆகியோர் தங்கள் வீட்டின் அருகே கேரம் விளையாடிக்கொண்டு இருந்தனர்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் அருண்(25) மதுபோதையில் அபினேஷ் தரப்பினர் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்தார். அருண் மதுபோதையில் இருந்ததால் அவரை அங்கிருந்து செல்லுமாறு அபினேஷ் கூறினார். இதனால் இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.
வெட்டிக்கொலை
நேற்று முன்தினம் மாலை அபினேசின் வீட்டின் அருகே அபினேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, அருள் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருண், அபினேஷ் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த அருணின் தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகியோர் சேர்ந்து அபினேஷ் மற்றும் அவரது உறவினர்களை தாக்கினர். இதைக்கண்ட பன்னீர் அவர்களை விலக்கி விட முயன்றார். அப்போது பன்னீருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
மேலும் அபினேஷ் உறவினர்களான கிருஷ்ணமூர்த்தி, அருள், ரகுபதி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பன்னீர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே அங்கிருந்து அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை
அரிவாள் வெட்டில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அருள், ரகுபதி ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகிய 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மோதலை விலக்கி விட சென்ற காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.