திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் 1,464 தொழிலாளர்கள் பயணம்

திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் 1,464 தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர்.

Update: 2020-05-20 22:19 GMT
திருப்பூர், 


திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். தற்போது கொரோனா பாதிப்பின் காரணமாக ரெயில் சேவை இல்லாததால், இந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்து கொண்டிருந்தனர். மேலும், தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்ட தினத்தன்று பஸ்களில் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

இந்நிலையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள்.

1,464 தொழிலாளர்கள்...

இதற்கிடையே திருப்பூரில் இருந்து பீகார் மாநிலம் சிட்மர்ஹி வரை சிறப்பு ரெயில் திருப்பூரில் இருந்து இயக்கப்பட்டது. இதில் சொந்த ஊர் செல்வதற்காக பதிவு செய்து வைத்திருந்த வடமாநில தொழிலாளர்கள் 1,464 தொழிலாளர்கள் பயணம் செய்தனர். இந்த ரெயில் மதியம் 2 மணிக்கு திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றது.

முன்னதாக இதில் பயணம் செய்ய வந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் பாட்டில் போன்றவைகளும் வழங்கப்பட்டது. பதிவு எண் படி ஒவ்வொருவரும் தனித்தனியாக அந்தந்த இடங்களில் அமரவைத்து அனுப்பிவைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்