வெள்ளகோவில் அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது
வெள்ளகோவில் அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
வெள்ளகோவில்,
திருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 37). இவரது மனைவி சங்கீதா (33). பியூட்டி பார்லர் வைத்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த விவேக் (28) என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டு காலமாக சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் “நான் எனது கணவரை விட்டு வந்து விடுகின்றேன். நீ என்னை திருமணம் செய்து கொள்” என்று சங்கீதா தொடர்ந்து விவேக்கிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.
கள்ளகாதலியின் தொந்தரவு தாங்க முடியாததால் அவரை கொலை செய்ய விவேக் திட்டம் தீட்டினார். இதையடுத்து கடந்த 9-ந் தேதி இரவு சங்கீதாவின் வீட்டிற்கு விவேக் சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் சங்கீதா மற்றும் அவருடைய கணவர் யுவராஜ் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். அங்கு யுவராஜையும், அவருடைய குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே விவேக் தள்ளினார். பின்னர் சங்கீதாவுக்கு விஷமாத்திரையை கொடுத்து விட்டு, கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் தானும் விஷமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
கள்ளக்காதலன் கைது
நீண்டநேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால், யுவராஜ், அருகில் இருந்தவர்கள் உதவியுடன், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சங்கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார், விவேக் மயங்கி கிடந்தார். உடனே விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விவேக் சிகிச்சை பெற்று வந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வில்லை. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பும் போது கள்ளக் காதலன் விவேக்கை வெள்ளகோவில் போலீசார் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.