மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த விபத்தில் காதலி பலி வாலிபருக்கு தீவிர சிகிச்சை
மூலனூர் அருகே மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த விபத்தில் காதலி பலியானார். வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மூலனூர்,
மூலனூர் அருகே உள்ள செம்மொழிநகரை சேர்ந்த செல்வக்குமாரின் மகன் சரத்குமார் (வயது 27). இவர் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், மூலனூர் அருகே உள்ள கருப்பணவலசை சேர்ந்த சக்திவேல் என்பவருடைய மகள் ஆர்த்திகாவும் (18) காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் விவகாரம் ஆர்த்திகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் பயன்படுத்தும் செல்போனை பெற்றோர் பிடுங்கிக்கொண்டு, அவரை திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்த்திகா செய்வது அறியாமல் திகைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர்த்திகாவுக்கு செல்போன் கிடைத்துள்ளது. உடனே தனது காதலனை தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து காதலன் சரத்குமார், ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு காதலியை அழைத்து செல்ல கருப்பணவலசு சென்றார். பின்னர் அங்கு காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ராக்கியாபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. அப்போது இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.
பலி
உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆர்த்திகா மட்டும் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்திகா இறந்தார். கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.