கர்நாடகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வாகன பாஸ் தேவையில்லை போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட் அறிவிப்பு

கர்நாடகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வாகன பாஸ் தேவையில்லை என்று போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் அறிவித்துள்ளார்.

Update: 2020-05-20 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் கொரோனா தடுப்பு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றியவர்களுக்கு போலீசார் தோப்புக்கரணம் போடுதல், தேர்வு நடத்துவது உள்பட பல்வேறு தண்டனை வழங்கினர். மேலும் வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து வந்தனர். இருப்பினும் ஊரடங்கை மீறி வெளியே வந்தவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உதவி தேவைப்படுவோர், விவசாயிகள், வியாபாரிகளுக்கு போலீசார் வாகன பாஸ் வினியோகித்தனர். மேலும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது கர்நாடகத்தில் கட்டிட பணிகள் தொடங்கவும், தொழிற்சாலைகள் இயங்கவும் கர்நாடக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதே வேளையில் நேற்று முன்தினம் முதல் கர்நாடகத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், வாடகை கார்கள் இயங்கவும் கர்நாடக அரசு அனுமதி வழங்கியது.

அதே வேளையில் கர்நாடகத்தில் வருகிற 31-ந்தேதி 4-வது கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தை விட்டு மாவட்டம் செல்ல வாகனங்களுக்கு பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மாநிலம் முழுவதும் வருகிற 31-ந்தேதி வரை இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல எந்த வாகனங்களுக்கும் பாஸ் வாங்க தேவையில்லை. ஊரடங்கு அமலில் இருப்பதால், தேவையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். ஆனால் இரவில் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்