செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய கல்லூரி மாணவர் திடீர் சாவு
ஈரோட்டில் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடிய கல்லூரி மாணவர் திடீரென இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.;
ஈரோடு,
இன்றைய தலைமுறையினர் செல்போன் மோகத்தில் மூழ்கி உள்ளனர். அதிலும், பல்வேறு வகையான செல்போன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள், இளைஞர்கள் அடிமையாகி இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரிடையே ‘பப்ஜி’ விளையாட்டு மிகவும் பிரபலமடைந்து வருகிறது. ஆன்லைன் மூலமாக நண்பர்கள் பலருடன் செல்போன்களில் விளையாடும் இந்த விளையாட்டு, எதிரிகளை தேடி தேடி சென்று சுட்டு வீழ்த்துவதை போன்று அமைந்துள்ளது. இந்த விளையாட்டில் இளைஞர்கள் பலர் தினமும் பல மணிநேரத்தை செலவழித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோட்டில் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடியபோது 16 வயது சிறுவன் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சதீஸ்குமார் (வயது 16). நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சதீஸ்குமார் செல்போனில் விளையாடுவதில் அதிக நேரத்தை செலவழித்து வந்துள்ளார். ஊரடங்கு காரணமாக கல்லூரி விடுமுறை விடப்பட்டு உள்ளதால் அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டுச்சந்தை திடலில் உட்கார்ந்து சதீஸ்குமார் செல்போனில் ‘பப்ஜி’ விளையாடியதாக தெரிகிறது. நீண்ட நேரமாக விளையாடி கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் சதீஸ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் கள், ஏற்கனவே சதீஸ்குமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின் முடிவில் சதீஸ்குமார் மாரடைப்பால் இறந்தது தெரியவந்து உள்ளது.
இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனில் அதிக நேரம் விளையாடியதால் மனஅழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பில் இறந்தாரா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
‘புளூவேல்’ என்ற விளையாட்டு உலகம் முழுவதும் பரவி பல்வேறு உயிர்களை காவு வாங்கியது. அதேபோல் ‘பப்ஜி’ விளையாட்டிலும் ஈரோட்டில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.