குடிமகன்களுக்கு குடை கொடுத்து உதவும் பணியாளர்கள்
ஈரோட்டில் மதுக்கடைகளுக்கு வரும் குடிமகன்கள் போதையாகும் முன்பே தள்ளாடும் வகையில் தடுப்பு வேலிகள் அமைத்தும், குடிமகன்களுக்கு டாஸ்மாக் பணியாளர்களே குடை கொடுத்து உதவும் காட்சிகளும் அரங்கேறி வருகின்றன.
ஈரோடு,
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பிறகு தமிழகம் முழுவதும் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் 8-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவு காரணமாக கடைகள் பூட்டப்பட்டன. மீண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் கடந்த 16-ந் தேதி டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 143 கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடந்து வருகிறது. மது வாங்க வருபவர்களுக்கு இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
குறிப்பாக குடிமகன்கள் மது வாங்கும் ஆர்வத்தில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்று விடாமல் இருக்க குறுக்கு வாக்கில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் ஒவ்வொருவராக கால்களை எட்டி வைத்துதான் செல்ல முடியும். கடந்த ஓரிரு நாட்கள் டாஸ்மாக் கடைகளில் கடுமையான கூட்டம் இருந்தது. நேற்று கணிசமான அளவுக்கு கூட்டம் குறைந்து இருந்தது.
இதனால் அதிக இடைவெளியில் குடிமகன்கள் கடைகளுக்கு சென்று மது வாங்கினார்கள். இடைவெளி அதிகமாக இருந்ததால் தடுப்பு வேலிகளுக்கு இடையே கட்டப்பட்டு உள்ள சிறு தடுப்பு கம்புகளை தாண்டி செல்ல சிலர் சிரமப்பட்டனர். ஒவ்வொரு தடுப்பு கம்பாக அவர்கள் கடந்து செல்லும்போது மதுக்குடித்து போதையாகும் முன்பே குடிமகன்கள் தள்ளாடிக்கொண்டு வருவதுபோன்றே இருந்தது.
இதுபோல் சில கடைகளில் அவசரத்தில் குடிமகன்கள் குடை எடுத்து வர மறந்து விட்டாலும், அங்குள்ள டாஸ்மாக் பணியாளர்களே குடைகொடுத்து உதவினார்கள். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்கள் குடை எடுத்து வரவேண்டும். முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வந்தது. குடை மற்றும் முகக்கவசம் இல்லாமல் வந்தால் மது வினியோகம் செய்யப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
எனவே மது விற்பனையாளர்கள் டோக்கன் வழங்கும் இடத்திலேயே குடைகள் இல்லாதவர்களுக்கு குடைகள் வழங்கி உதவினார்கள். குடிமகன்களும் மது வாங்கிவிட்டு திரும்ப வந்து குடைகளை வழங்கிவிட்டு நன்றி கூறி விடை பெற்றார்கள். குடை இல்லாத காரணத்தால் விற்பனை குறைந்து விடக்கூடாது என்று இந்த திட்டத்தை பல கடைகளிலும் அமல்படுத்தி உள்ளனர் பணியாளர்கள்.
ஈரோடு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் இளங்கோ ஈரோடு நகர் பகுதியில் பல டாஸ்மாக் கடைகளிலும் ஆய்வு செய்தார். காளைமாட்டு சிலை பகுதியில் உள்ள எலைட் மதுவிற்பனை மையத்தில் அவர் ஆய்வு நடத்தினார். அவர் கூறும்போது, “மதுக்கடைகளில் பொதுமக்கள் வருகை குறையத்தொடங்கி உள்ளது. தற்போது வழக்கமான அளவில் வருவதால் எங்கும் அதிக கூட்டம் இல்லை. மதுவிற்பனை அமைதியாக நடந்து வருகிறது”, என்றார்.