கரூர் அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மது பழக்கத்தால் விபரீதம்
கரூர் அருகே மது குடிக்கும் பழக்கத்தால், திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்,
கரூர் அருகே மது குடிக்கும் பழக்கத்தால், திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுமாப்பிள்ளை
கரூர் அருகே உள்ள வேடிச்சிப்பாளையம் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 33). பெயிண்டரான இவருக்கு சந்தோஷம் (24) என்ற பெண்ணுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின் கணவன், மனைவி இருவரும், அதே பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். ஜெயபிரகாசுக்கு அதிகமாக மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் புதுமண தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினமும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் மனம் உடைந்த ஜெயபிரகாஷ், அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தொங்கினார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை கீழே இறக்கி சிகிச்சைக்காக கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஜெயபிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிமுத்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார். திருமணமான 3 மாதத்தில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.