மதுரை அருகே லாரி கிளனர் வெட்டிக்கொலை மது போதையில் நண்பர் வெறிச்செயல்

மது போதையில் லாரி கிளனரை வெட்டிக்கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-05-20 04:34 GMT
மேலூர், 

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பழைய சுக்காம்பட்டியை சேர்ந்தவர் பிரபு. அதே பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 46). லாரி கிளனர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு பழையசுக்காம்பட்டி அருகே உள்ள மாத்திக்கண்மாய் கரையோரம் அமர்ந்து மதுகுடித்ததாக கூறப்படுகிறது.

மதுபோதையில் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிதுநேரத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த பிரபு அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டியதாக தெரியவருகிறது.

கழுத்து உள்பட பல இடங்களில் சிவக்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதைதொடர்ந்து பிரபு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். சிவக்குமாரின் உடலை பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர் .

கைது

கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நண்பர்கள் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டபோது பிரபு கழுத்தில் அணிந்து இருந்த தங்கச்சங்கிலியை சிவக்குமார் பறித்ததாக தெரிகிறது. இதனால் போதையில் இருந்த பிரபு ஆத்திரத்தில் அரிவாளால் சிவக்குமாரை வெட்டிக் கொன்றதாக தெரியவந்தது. போலீசார் பிரபுவை கைது செய்தனர்.

கடந்த 8 நாட்களில் மேலூர் பகுதியில் 4 கொலைகள் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்