மாநகர பகுதிகளிலும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் திருச்சி கலெக்டரிடம் மனு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுமார் 2 மாத காலமாக சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

Update: 2020-05-20 04:25 GMT
திருச்சி, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு சுமார் 2 மாத காலமாக சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. 

இந்தநிலையில் ஊரக பகுதிகளில் மட்டும் சில நிபந்தனைகளுடன் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக ஊரக பகுதிகளில் நேற்று சலூன் கடைகள் திறக்கப்பட்டன. இந்தநிலையில் நேற்று காலை திருச்சி வயலூர்ரோடு முடிதிருத்துவோர் அமைப்பு சங்க அமைப்பாளர் செல்வம் தலைமையில், முடி திருத்துவோர் தங்கள் குடும்பத்தினருடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், “ வயலூர்ரோடு பகுதியில் 35 சலூன் கடைகள் உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு தொடக்கத்தில் இருந்து அரசு உத்தரவுக்கு கட்டுப்பட்டு 55 நாட்களாக கடையை மூடி வைத்துள்ளோம். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் அனைவரும் பசியும், பட்டினியுடனும் இருக்கிறோம். ஆகவே தினமும் 5 மணிநேரமாவது சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். அரசு காட்டும் வழிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் செயல்படுகிறோம்” என்று கூறப்பட்டு இருந்தது.

தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்க உறுப்பினர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “எங்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் திருமணம் சார்ந்த தொழில்கள் செய்து வருகிறோம். கொரோனா ஊரடங்கு காலத்தில் திருமணங்கள் நடைபெறாத சூழலில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கிறோம். ஆகவே, திருமணங்களை நடத்த அரசாங்கம் விதிமுறைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும். 

இதன் மூலம் திருமணம் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வரும் டெக்கரேட்டர்கள், ஒளி-ஒலி அமைப்பாளர்கள், பந்தல் மற்றும் மேடை அமைப்பாளர்கள், சமையல் தொழிலாளர்கள், போட்டோ, வீடியோ கலைஞர்கள் என பல தொழிலாளர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும். ஆகவே கட்டுப்பாடுகளுடன் திருமணங்களை நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

மேலும் செய்திகள்