சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜீயபுரம்,
சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூறைக்காற்றுடன் மழை
திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சோமரசம்பேட்டை உள்பட ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன. சூறைக்காற்று காரணமாக ஜீயபுரம், சோமரசம்பேட்டை, ஸ்ரீரங்கம், லால்குடி, திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் போன்ற இடங்களில் நன்கு வளர்ந்து இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.
ஏற்கனவே, கொரோனா பாதிப்பால் தாங்கள் விளைவித்த பொருட்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். வாழையாவது, கை கொடுக்கும் என்று நினைத்திருந்த நிலையில் சூறைக்காற்றால் பெருமளவு வாழை மரங்கள் சாய்ந்து கிடப்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதேபோல, வெற்றிலை கொடிக்காலும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.
இழப்பீடு
ஏற்கனவே, கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் விவசாயிகள் மத்தியில் சூறைக்காற்று வடிவில் மேலும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆகவே, விவசாயிகளின் நலன்கருதி சூறைக்காற்றால் சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்வதோடு புதிய சாகுபடிக்கு வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் கடன் வழங்கவும் மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.