புனேயில் இருந்து நெல்லைக்கு ரெயிலில் 419 பேர் வந்தனர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
புனே நகரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 419 பேர் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
நெல்லை,
புனே நகரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலில் 419 பேர் வந்தனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கு
தமிழகத்தை சேர்ந்தவர்கள் மராட்டிய மாநிலம் மும்பை மற்றும் புனே நகரில் அதிகமானோர் வசித்து வருகிறார்கள். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் அங்கு உள்ளனர். அவர்கள் சொந்தமாக தொழில் செய்தும், பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்தும் வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 4-வது கட்டமாகவும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், மராட்டிய மாநிலத்தில் வசித்து வந்த தமிழர்கள் சிரமப்பட்டனர். எனவே, தங்களை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
419 பேர் வருகை
அதன்படி புனே நகரில் இருந்து தமிழர்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் ஒரு சிறப்பு ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் நேற்று பிற்பகல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
அதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 239 பேர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 72 பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 64 பேர், ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பேர், குமரி மாவட்டத்தை சேர்ந்த 16 பேர், விருதுநகரை சேர்ந்த 26 பேர் என மொத்தம் 419 பேர் வந்து இறங்கினார்கள். அவர்கள் அரசு பஸ்களில் அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கொரோனா பரிசோதனை
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கும், தனிமைப்படுத்துதல் முகாம் அமைக்கப்பட்டு இருக்கும் இடங்களுக்கும் அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால் அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவார்கள். மற்றவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட உள்ளனர்.