சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, வெளி மாநில தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-05-20 02:27 GMT
நாகர்கோவில், 

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி, வெளி மாநில தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வெளி மாநில தொழிலாளர்கள்

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் வசிக்கும் வெளி மாநில தொழிலாளர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அவர்கள், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் இருந்து 957 வெளிமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும்படி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தி வருகிறார்கள்.

பரபரப்பு

இந்த நிலையில் நேற்று வெளிமாநில் தொழிலாளர்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் அலுவலகத்தின் வாசலில் நீண்ட வரிசையில் அமர்ந்து இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, ‘குமரி மாவட்டத்தில் மீதமுள்ள வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், எனவே விரைவில் அனைவரையும் அனுப்பி வைப்போம்‘ என்றும் கூறினர்.

அதுவரையிலும் தொழிலாளர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அதிகாரிகள் வழங்கினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வெளி மாநில தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பட்டு இருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்