ரேஷன்கடையில் பொருட்கள் குறைவாக வழங்கினால் புகார் செய்யலாம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிவிப்பு

ரேஷன் கடையில் பொருட்கள் குறைவாக வழங்கினால் புகார் செய்யலாம் என்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்து உள்ளனர்.;

Update: 2020-05-20 01:46 GMT
நாகர்கோவில், 

ரேஷன் கடையில் பொருட்கள் குறைவாக வழங்கினால் புகார் செய்யலாம் என்று உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறிவித்து உள்ளனர்.

ரேஷன் பொருட்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ரேஷன் கடையில் உணவு பொருட்களை குறைவாக வழங்குவதாக அரசியல் கட்சிகள் சார்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரை பொதுமக்களிடம் ரேஷன் பொருட்கள் சரியாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதை கேட்டறிந்து, விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார்.

25-க்கும் மேற்பட்ட...

அதைத்தொடர்ந்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் உத்தரவின்பேரில், மதுரை மண்டல சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டு இளங்கோவன் ஆகியோர் ஆலோசனையின்பேரில் குமரி மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்றனர். அங்கு பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் முறையாக மத்திய, மாநில அரசுகள் வழங்க உத்தரவிட்டுள்ள உணவுப் பொருட்கள் அளவு குறையாமல் இலவசமாக வழங்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தனர்.

புகார்

பின்னர் அளவு குறைவாக வழங்கினாலோ, கடைக்காரர்கள் பதுக்கல் மற்றும் முறைகேடான செயல்களில் ஈடுபட்டாலோ உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோரின் செல்போன் எண்களுக்கு புகார் செய்யலாம் எனக்கூறி செல்போன் எண்களுடன் கூடிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினர். அதில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் செல்போன் எண் 9498104441, துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் செல்போன் எண் 9498104527, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் செல்போன் எண் 9498158858, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் செல்போன் எண் 9498194260 என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் ரேஷன் கடைகளிலும் இந்த துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டன. ரேஷன் கடைக்காரர்களிடமும் அரசு உத்தரவிட்டுள்ள இலவச உணவுப்பொருட்களை அளவு குறையாமல் வழங்க அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்