50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் அலுவலகங்கள்: கிராமங்களில் இருந்து வரும் ஊழியர்களுக்கு பஸ் வசதி அரசு அலுவலர்கள் எதிர்பார்ப்பு

50 சதவீத பணியாளர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கும் நிலையில் கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் ஊழியர்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அரசு அலுவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-05-20 01:01 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நிலையில் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை கூட்டுறவுத்துறை உள்ளிட்ட துறை அலுவலகங்கள் தொடர்ந்து இயங்கின. இங்கு பணியாற்றும் அலுவலர்களின் வசதிக்காக மாவட்டத்தில் காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முதல் அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் நேற்று முன்தினம் 50 சதவீத அலுவலர்களுடன் இயங்கின. ஆனால், அதற்கு ஏற்ப கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால், அரசு ஊழியர்கள் பஸ்களில் சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக அமர்ந்து பயணம் செய்தனர். இருக்கையில் இடமின்றி பலரும் நின்று கொண்டே பயணம் செய்தனர்.

கிராமங்களுக்கு பஸ்கள்

இந்நிலையில் நேற்று கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று சமூக இடைவெளியை கடைபிடித்து பஸ்களில் அரசு ஊழியர்கள் பயணம் செய்தனர். அதே நேரத்தில் தேனியில் இருந்து பெரியகுளம், கம்பம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளுக்கு மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால், கிராமப்புற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

தேனி மாவட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கிராமப்புற பகுதிகளில் வசிக்கின்றனர். இதனால், அவர்கள் தங்களின் ஊர்களில் இருந்து வாகனங்களில் நகர்ப்புறங்களுக்கு வந்து பஸ்களில் ஏறிச் செல்வதற்கு சிரமம் அடைகின்றனர். மேலும் பணி முடிந்து வீடு திரும்பவும் தாமதம் ஆகிறது. எனவே நகர்ப்புற பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது போல், தேனியில் இருந்து அரண்மனைப்புதூர் மார்க்கமாக சின்னமனூர் மற்றும் உப்புக்கோட்டை மார்க்கமாக சின்னமனூர் ஆகிய பகுதிகளுக்கும் தேவையான பிற கிராமப்புற பகுதிகளுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என்பது அரசு அலுவலர்களின் கோரிக்கையாக உள்ளது.

கோரிக்கை மனு

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் குபேந்திரசெல்வம் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அவர்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜாவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், “அரசு அலுவலர்களின் நலன் கருதி கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் ஊழியர்களின் நலன் கருதி கிராமப்புறங்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்