புயல் சின்னம் காரணமாக தரங்கம்பாடி அருகே கடல் சீற்றம் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சம்
புயல் சின்னம் காரணமாக தரங்கம்பாடி அருகே சந்திரபாடியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொறையாறு,
புயல் சின்னம் காரணமாக தரங்கம்பாடி அருகே சந்திரபாடியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடல்நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடல் சீற்றம்
தெற்கு மற்றும் தென்கிழக்கு அந்தமான் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறி உள்ளது. ‘உம்பன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், ஒடிசா, சிக்கிம், அஸ்சாம் ஆகிய பகுதிகள் வழியாக மேற்குவங்காளத்தில் இன்று (புதன்கிழமை) மாலை கரையை கடக்கும் என கூறப்படுகிறது. இதனை முன்னிட்டு நாகையில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயலை முன்னிட்டு மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக நேற்று நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா சந்திரபாடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து வருகிறது.
பொதுமக்கள் அச்சம்
தொடர்ந்து கடல்நீர் ஊருக்குள் புகுவதால் அங்கு வசித்து வரும் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். இதேபோல் சந்திரபாடி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர்பேட்டை மீனவ கிராமத்தில் வசித்து வரும் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள், 450 பைபர் படகுகள், 50 கட்டு மரங்களை பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். தகவல் அறிந்த தரங்கம்பாடி தாசில்தார் சித்ரா மற்றும் வருவாய்த்துறையினர் சந்திரபாடி கிராமத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் தாசில்தார், அங்குள்ள மக்களை பாதுகாப்பாக இருக்க கேட்டு கொண்டார். அப்போது அவருடன் கிராம நிர்வாக அலுவலர் சிவராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா மற்றும் மீனவ பஞ்சாயத்தார்கள் உடனிருந்தனர்.
கருங்கல் தடுப்புச்சுவர்
இது குறித்து மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் கூறியதாவது:-
இங்கு ஆண்டுதோறும் இயற்கை பேரிடர் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. அப்போது ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுகிறது. இதனால் சந்திரபாடி ஊராட்சி பகுதியில் கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தி வருகிறோம். அதேபோல் தூண்டில் வளைவு, துறைமுகம் அமைத்து கொடுத்தால் மீன்பிடித்து வரவும், படகுகள் மற்றும் வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை இயற்கை பேரிடர் காலங்களில் பாதுகாக்கவும் உதவும் என்றனர்.