மக்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் வேலை செய்ய முன்வர வேண்டும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள்
பசுமை மண்டலங்களில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்ய முன்வர வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்து உள்ளார்.;
மும்பை,
மராட்டியத்தில் 4-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று முன்தினம் இரவு மாநில மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவா் கூறியதாவது:-
பசுமை மண்டலங்களில் உள்ள மக்கள் குறிப்பாக இளைஞர்களிடம் கோரிக்கை ஒன்றை வைக்கிறேன். நீங்கள் உங்கள் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வேலை செய்ய முன்வர வேண்டும். மராட்டியத்தை சுயசார்புடைய மாநிலமாக மாற்ற வேண்டும்.
மாநில அரசு ஏற்கனவே 70 ஆயிரம் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி கொடுத்து உள்ளது. இதில் 50 ஆயிரம் தொழிற்சாலை செயல்பட தொடங்கி உள்ளன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கி உள்ளனர். இதேபோல புதிய தொழிற்சாலைகள் தொடங்க நாம் 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தயாராக வைத்து உள்ளோம். இடத்தை சொந்தமாக வாங்க முடியாதவர்களுக்கு தொழிற்சாலை தொடங்க அரசு நிலத்தை குத்தகைக்கு கொடுக்கும். மாநிலத்தில் கொரோனா பரவல் சங்கிலி உடையவில்லை. ஆனால் ஊரடங்கு காரணமாக நோய் பாதிப்பு பரவும் வேகம் குறைந்து உள்ளது.
இவ்வாறு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.