பிரதமருக்கு எழுதுவதை போல உத்தவ் தாக்கரேவுக்கும் சரத்பவார் கடிதம் எழுத வேண்டும் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தல்
பிரதமருக்கு எழுதுவதை போல உத்தவ் தாக்கரேவுக்கும் சரத்பவார் கடிதம் எழுத வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
கொரோனா பாதிப்பில் சரிந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு எடுக்க பிரதமர் மோடி கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்டங்களை வெளியிட்டார். இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.
அந்த கடிதத்தில் மத்திய அரசு அறிவித்து உள்ள சிறப்பு திட்டங்களால் விவசாயிகளுக்கு உடனடியாக பலன் கிடைக்காது என குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த விவகாரம் குறித்து பா.ஜனதாவை சேர்ந்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருப்பதாவது:-
உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு மத்திய அரசை போல சிறப்பு திட்டங்களை அறிவிக்க வேண்டும். சரத்பவார் பிரதமர் மோடிக்கு நிறைய கடிதங்களை எழுதுகிறார். அதுபோன்ற கடிதத்தை அவர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கும் எழுத வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பா.ஜனதா மராட்டிய நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும், எல்லா பிரச்சினைகளையும் அரசியல் செய்வதாக ஆளும் தரப்பு கூறியுள்ளது.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் சாவந்த் கூறுகையில், ‘‘பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். அவர்கள் ஏன் அதை முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்கவில்லை?. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவி செய்யாமல் பா.ஜனதா எல்லாவற்றையும் அரசியல் செய்கிறது’’ என்றார்.