தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 100 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 100 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-05-19 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 100 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. தஞ்சை கீழராஜவீதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு அந்த கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாரதி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாநகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கட்டுப்பாட்டுக்குழு தலைவர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, போக்குவரத்து தொழிற்சங்கம் துரை.மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கைவிட வேண்டும்

ஆர்ப்பாட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் நிபந்தனைகள் இல்லாமல் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி சீர்குலைக்க கூடாது. தொழிலாளர் நல சட்டங்களை 3 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பது அல்லது நீக்கம் செய்வது என்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிரூட்டும் வகையில், கடன்களின் மூன்று மாத தவணைத்தொகையினை தள்ளுபடி செய்ய வேண்டும்.

குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். விவசாயிகள் கடன்களை முழுமையாக ரத்து செய்திட வேண்டும். கொரோனா முடக்க காலத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டம் மற்றும் திட்டத்தை சீர்குலைக்கக் கூடாது. 50 வயதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கக்கூடாது.

குடிமராமத்து பணி

மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் விவசாயிகள் சங்கம் மற்றும் பாசனதாரகள் சங்கத்தின் கண்காணிப்பு, பங்களிப்புடன் குடிமராமத்து பணிகளை உடனே தொடங்கி முடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பட்டுகோட்டை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மையங்களில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்