ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 3 நாட்களாக நடந்து செங்குன்றம் வந்த வடமாநில தொழிலாளர்கள்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 3 நாட்களாக நடந்து செங்குன்றம் வந்த வடமாநில தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி முகாமில் தங்க வைத்தனர்.

Update: 2020-05-19 23:30 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

தமிழகத்தின் தலைநகரமாகவும், வந்தாரை வாழவைக்கும் பூமியாகவும் விளங்கும் சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், பெரும்பாலான தொழிலாளர்கள் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்தனர். மேலும் ஏராளமான தொழிலாளர்கள் டீ கடை, உணவகங்கள், சிகை அலங்கார கடைகள் என பல்வேறு தொழில் களை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், இத்தகைய தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழக அரசால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

பின்னர், முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்கள் கொரோனா அறிகுறி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சொந்த மாநிலங்களுக்கு சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தங்கள் ஊருக்கு சிறப்பு ரெயில்களில் செல்வதற்கு எவ்வாறு பதிவு செய்ய வேண்டும் என்பது தெரியாத வடமாநில தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இத்தகைய தொழிலாளர்கள் சைக்கிளில் பயணம் மேற்கொண்டும், நடை பயணமாக நடந்து சென்றும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரான பீகார் மாநிலத்துக்கு செல்வதற்காக நடைபயணம் மேற்கொண்டனர். கடந்த 3 நாட்களாக நடந்த அவர்கள் நேற்று காலையில் சென்னை செங்குன்றம் வந்தடைந்தனர்.

இந்த நிலையில், சாலையில் நடந்து வந்த வடமாநில தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து சாலையில் நடந்து வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கனிவுடன் உணவு வழங்கி அவர்களை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்