செந்துறை அருகே தகராறை தட்டிக்கேட்ட விவசாயி அடித்துக்கொலை பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
செந்துறை அருகே தகராறை தட்டிக்கேட்ட விவசாயியை அடித்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செந்துறை,
செந்துறை அருகே தகராறை தட்டிக்கேட்ட விவசாயியை அடித்து கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயி அடித்துக்கொலை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் காலனி தெருவை சேர்ந்தவர் கந்தசாமி(வயது 65). விவசாயி. அதே தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கந்தசாமி மகன் கலைமணிக்கும், ரவிச்சந்திரன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து கலைமணியை, அவரது சகோதரர்கள் வீட்டிற்குள் கொண்டு சென்று அடைத்து வைத்தனர்.
இந்த நிலையில் தகராறை தட்டிக்கேட்க வந்த கந்தசாமியை ரவிச்சந்திரன் மற்றும் அவரது தரப்பினர் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த கந்தசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
5 பேர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் மேலும் மோதல் சம்பவம் நடைபெறாமல் இருக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கந்தசாமியின் மற்றொரு மகன் காட்டுராஜா கொடுத்த புகாரின் பேரில், செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கொலை வழக்காக பதிவு செய்து, ரவிச்சந்திரன்(55), அகிலன்(27), கபிலன்(25), அஜித்(22), குருசாமி(50) ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் தலைமறைவாக உள்ள பவித்ரன்(23), கலா(42), வளர்மதி(45) ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார். இதில் கலா பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.