கூடுதலாக 2 மணி நேரம் திறப்பு: டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்தது
கூடுதலாக 2 மணி நேரம் திறக்கப்பட்டுள்ளதால் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்தது.
கடலூர்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 16-ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் 143 கடைகளில் 126 கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் நாள் ஒன்றுக்கு கடைக்கு 500 டோக்கன் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்காக மது பிரியர்கள் காலை முதலே வந்து காத்திருந்து டோக்கன் வாங்கி மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.மறுநாளுக்கான டோக்கனும் வினியோகம் செய்யப்பட்டது.
டோக்கன் கிடைக்காமல் மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சில கடைகளில் 4 குவாட்டர் பாட்டில்கள் மட்டும் வழங்கப்பட்டது. பெரும்பாலான கடைகளில் தேவைக்கேற்ப மதுபாட்டில்களை மது பிரியர்கள் வாங்கி சென்றனர். அதேபோல் நேற்று முன்தினமும் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையும் டோக்கன் பெற்று மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரத்தை கூடுதலாக 2 மணி நேரம் நீட்டித்தது. அதாவது காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை விற்பனை செய்ய உத்தரவிட்டது. இதன்படி நேற்று 3-வது நாள் கூடுதலாக 2 மணி நேரம் விற்பனை நடைமுறைக்கு வந்தது.
இதனால் கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட குறைந்தது. கடலூர் பஸ் நிலையம் அருகில் 2 கடைகள் ஒரே இடத்தில் உள்ளது. கடந்த 2 நாட்களாக இந்த கடைகளில் மதுபாட்டில்கள் வாங்குவதற்காக திறந்த வெளியில் மது பிரியர்கள் அமர வைக்கப்பட்டனர். ஆனால் நேற்று அந்த இடத்தில் யாரும் இல்லை. டோக்கன் பெற்ற அனைவரும் தங்களின் விருப்பமான நேரத்தில் வந்து மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
இதேபோல் விற்பனையும் மந்தமாக இருந்தது. மாலை 4 மணிக்கு பிறகு கடலூர் பஸ் நிலையத்தையொட்டி உள்ள 2 கடைகளிலும் மதுபாட்டில்கள் வாங்க குறைந்த எண்ணிக்கையிலான மது பிரியர்களே வந்து சென்றனர். ஒரு சிலர் மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார் தெரிவித்தனர்.