தமிழகத்தில் 23 மாவட்டங்களை சேர்ந்த 558 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு ரெயிலில் திருச்சி வந்தனர்
தமிழகத்தில் 23 மாவட்டங்களை சேர்ந்த 558 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் திருச்சிக்கு வந்தனர்.
திருச்சி,
தமிழகத்தில் 23 மாவட்டங்களை சேர்ந்த 558 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் திருச்சிக்கு வந்தனர்.
டெல்லியில் தவித்த தமிழர்கள்
தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், விழுப் புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 23 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் டெல்லியில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்தனர்.
கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் இவர்கள் தங்களது சொந்த ஊருக்கு வர முடியாமல் தவித்து வந்தனர்.
558 பேர் வந்தனர்
இந்தநிலையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு மத்திய அரசு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கியதை தொடர்ந்து, நேற்று திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64 பேர் உள்பட 266 பேர் டெல்லியில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் திருச்சிக்கு வந்தனர். நேற்று அதிகாலை 4.45 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வந்தவர்களுடன் டெல்லியில் நடந்த தப்லிக் மாநாட்டிற்கு சென்ற 292 பேரும் வந்து இறங்கினர்.
இவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 64 பேரும் அரசு பஸ்கள் மூலம் திருச்சி அருகே சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனை
தப்லிக் மாநாட்டில் இருந்து திரும்பிய 292 பேரும் தனியார் பஸ்கள் மூலம் காஜாநகரில் உள்ள அரபி கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை நடைபெற்றதை மாவட்ட கலெக்டர் சிவராசு நேரில் பார்வையிட்டார். மற்ற மாவட்டங்களை சேர்ந்த 202 பேரும் 5 அரசு பஸ்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.