ஊரடங்கு முடியும் வரை மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்று கோரிக்கை
ஊரடங்கு முடியும் வரை மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
திருச்சி,
ஊரடங்கு முடியும் வரை மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்கவேண்டும் என கோரி முடி திருத்தும் தொழிலாளர்கள் நீண்ட வரிசையில் நின்றனர்.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் 3 முறை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டபோது 34 வகையான தொழில்கள் மற்றும் கடைகளுக்கு சிறிது தளர்வு வழங்கப்பட்டது. ஆனால் இந்த தளர்விலும் முடிதிருத்தும் சலூன் கடைகளுக்கு தளர்வு வழங்கப்படவில்லை. நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளபோதும் இதே நிலை தான். இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் ஒட்டுமொத்தமாக முடங்கி போய் உள்ளது.
திரண்டு வந்து மனு
முடிதிருத்தும் தொழிலாளர்கள் பல முறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் அவர்களது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. இந்நிலையில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் திரண்டு வந்தனர். குடும்பத்துடன் வந்த அவர்கள் கலெக்டர் அலுவலகத்தின் பிரதான வாயிலில் இருந்து மாவட்ட தொழில் மைய மேலாளர் அலுவலகம் வரை சாலையின் ஒரு பகுதியில் வரிசையாக நின்றனர்.
சமூக இடைவெளியுடன் நின்ற அவர்கள் எல்லா தொழில்களும் நடக்குதே, எங்கள் தொழிலை மட்டும் முடக்காதே, சலூன் கடைகளை திறக்க அனுமதி கொடு, இல்லையேல் நிவாரண உதவி வழங்கு என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்து இருந்தனர்.
திருச்சி மாவட்ட, மாநகர மருத்துவர்-முடி திருத்தும் தொழிலாளர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் தர்மலிங்கம், பொருளாளர் முருகேசன், ஜங்ஷன் பகுதி அமைப்பாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
மாதம் ரூ.15 ஆயிரம்
அப்போது செயலாளர் தர்மலிங்கம் கூறுகையில் ‘ஊரடங்கு நீடிக்கும் வரை முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரம் நிவாரண தொகை வழங்கவேண்டும், காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை முடி திருத்தும் கடைகளை திறக்க அனுமதிக்கவேண்டும், ஊரடங்கு தொடர்ந்து நீடித்துக்கொண்டே செல்வதால் முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு சார்ந்துள்ள கடைநிலை பணிகளில் தற்காலிக வேலை வழங்கவேண்டும் என்றார்.