மணப்பாறையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது
மணப்பாறையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி,
மணப்பாறையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
லாட்டரி சீட்டுகள் விற்ற 6 பேர் கைது
மணப்பாறை பகுதிகளில் லாட்டரி சீட்டுகள் விற்றதாக ராஜசேகர் (38), தமிழ்ச்செல்வன் (32), திவாகரன் (43), மனோகரன் (60), மூர்த்தி (47), ரவி (43) ஆகிய 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து மணப்பாறை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ரூ.21,565, 4 மோட்டார் சைக்கிள்கள், 7 செல்போன்கள் மற்றும் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.
வீடுகள் சூறை
* திருச்சி வடக்குதாராநல்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 39). இவரை சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சிலர் வெட்டி படுகொலை செய்தனர். இதை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் மணிகண்டனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மணிகண்டனின் மனைவி பழனியம்மாள் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அஜீத், ஜான், அவரது தம்பி கிளிண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்தநிலையில் மணிகண்டன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பெண்கள் சிலர் நேற்று அதே பகுதியில் உள்ள ஜான், அஜீத் ஆகியோரின் வீடுகளுக்கு சென்றனர். அங்கு வீட்டில் இருந்த பொருட்களை அவர்கள் உடைத்து சூறையாடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மயங்கி விழுந்த பெண் சாவு
* முசிறி ஒன்றியம் பேரூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இடையப்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலைதிட்ட தொழிலாளர்கள் உறிஞ்சுகுழி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேரூர் கிராமத்தை சேர்ந்த பெண் தொழிலாளி வள்ளி (55) என்பவர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த முசிறி ஒன்றிய ஆணையர்கள் மனோகரன், குணசேகரன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிசை வீட்டில் தீ விபத்து
* மருங்காபுரி கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரது குடிசை வீட்டில் நேற்று இரவு திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
* ஊரடங்கின்போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நேற்று மட்டும் 315 வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரை 11,729 வாகனங்கள் உரிய ஆவணங்களை பெற்று கொண்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் தெரிவித்துள்ளார்.
பெண்ணை கர்ப்பமாக்கியவர் கைது
* லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 41), கூலித் தொழிலாளி. திருமணமான இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர், அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பார்வை குறைபாடுள்ள பெண் ஒருவரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, உல்லாசமாக இருந்து வந்தார். இதனால், அப்பெண் கர்ப்பமானார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிவக்குமாரிடம் அப்பெண் கேட்டபோது அவர் மறுப்பு தெரிவித்தார். இதுதொடர்பாக அந்த பெண், லால்குடி மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தார்.
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
* திருச்சி உறையூர் ராமலிங்கநகர் பகுதியை சேர்ந்தவர் அருணகிரி(வயது 40). வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 16-ந் தேதி அருணகிரியின் தாயார் இறந்து விட்டார். இதனால், மனமுடைந்த நிலையில் இருந்து வந்த அவர், நேற்று பகல் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.