நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நிவாரணம் கேட்டு திரண்டவர்களால் பரபரப்பு
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிவாரணம் கேட்டு திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நிவாரணம் கேட்டு திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் நிவாரண உதவி கேட்டு, நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்து வருகிறார்கள்.
இசைக்கலைஞர்கள்
அதன்படி, குமரி மாவட்ட தமிழ் கிராமிய பேண்டு வாத்திய இசைக்கலைஞர்கள் முன்னேற்ற சங்க தலைவர் சோபிதாஸ் தலைமையில் நிர்வாகிகள் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளதால் எங்கள் இசைத்தொழில் கடந்த 3 மாதங்களாக முடங்கியுள்ளது. எந்த நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. மேலும் இந்தநிலை தொடரும்பட்சத்தில் எங்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். மேலும் அரசு அறிவித்த நலவாரிய உறுப்பினர்களுக்கு ரூ.1000 இன்னும் பல கலைஞர்களுக்கு வந்துசேரவில்லை. எனவே பேண்டு இசைக்கலைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணமும், ரேஷன் கடையின் வாயிலாக உணவுப்பொருட்களும், வங்கி மூலம் வட்டியில்லா கடனும் கிடைக்க உதவ கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சமையல் கலைஞர்கள்
குமரி மாவட்ட சமையல் கலைஞர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தை சேர்ந்த நீலகண்டன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக குமரி மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் சமையல் தொழிலை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வருடத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் நாட்களிலும், வேறு முக்கிய தினங்களிலும் மட்டுமே சமையல் செய்து வரும் எங்களுக்கு பெரிதாக வருமானம் ஒன்றுமில்லை. நாங்கள் இதுவரை நலவாரியத்தில் பதிவு செய்யாமல் இருந்து விட்டோம். கொரோனா நோய்த்தொற்று காரணமாக எங்களிடம் முன்பதிவு செய்து இருந்தவர்கள், அதை ரத்து செய்து விட்டனர். மேலும் வருமானமும் இல்லாமல் தவித்து வருகிறோம். இதனால் எங்கள் குடும்பம் பசியால் வாடிக்கொண்டிருக்கிறது. எனவே எங்கள் குடும்பங்கள் வாழ அரசின் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
டிரைவர், கண்டக்டர்கள்
மினி பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், குமரி மாவட்டத்தில் மினி பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் என சுமார் 600 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் 200 மினி பஸ்களில் பணியாற்றி வருகிறார்கள். அரசு ஊரடங்கு பிறப்பித்ததில் இருந்து தொடர்ந்து 50 நாட்களாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், முடிதிருத்துவோர் அனைவருக்கும் அரசு உதவி செய்து வருகிறது. அதே போல் அரசு எங்களுக்கும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல் நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க ஏராளமானவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக மீனவ மக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கெவின் ஆராச்சி, அமைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடுத்த மனுவில், “ஈரானில் சிக்கிய மீனவர்களை தமிழக அரசு தனது சொந்த செலவில் மீட்டு தமிழகம் கொண்டுவர வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.