குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகளில் ஆராதனை நடத்த அனுமதிக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகளில் ஆராதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.;
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ சபைகளில் ஆராதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அகில இந்திய கிறிஸ்தவர் முன்னேற்ற சேனை தலைவர் தியோடர் சேம் தலைமையில் நிர்வாகிகள் விஜயகுமார், ஆல்பர்ட், காட்வின் ஏசுதாஸ், பீட்டர் உள்பட பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திறக்கப்படவில்லை
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் வழிபாட்டுத்தலங்களில் எந்த வழிபாடுகளும் நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்மூலம் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா என்ற கொடிய நோய்க்கு எதிராகவும், நாட்டுக்காகவும் ஜெபித்துக் கொண்டு இருக்கிறோம். தற்போது சந்தைகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்கள் கூடும் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலகங்களும் திறக்கப்பட்டு 50 சதவீத தொழிலாளர்களுடன் செயல்படுகிறது. மதுக்கடைகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்னும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படவில்லை.
வேதனை
இவ்வளவு கொடிய நோய்க்காக வழிபாட்டுத்தலங்களில் ஜெபிக்கும் அனுமதியை அரசு தர மறுப்பது வேதனையாக உள்ளது. எனவே தேவாலயங்களில் அரசு என்னென்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ அதை நாங்கள் கடைபிடிக்க தயாராக இருக்கிறோம்.
சமூக இடைவெளி, ஒரு ஆராதனையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர் களை கலந்துகொள்ளச் செய்வது, முகக்கவசம் அணிவது, கை கால் கழுவுவது, வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் வருவது போன்ற அனைத்தையும் கடைபிடிக்க தயாராக இருக்கிறோம். எனவே நமது நாட்டுக்காகவும், இந்த கொடிய நோய்க்கு எதிராகவும், உலகத்துக்காகவும் தேவாலயங்களில் எங்கள் போதகர்களோடு ஜெபிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.