கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை சூறைக்காற்றில் மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் பரபரப்பு
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 25 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. சூறைக்காற்றால் ஏராளமான வாழைகள் சேதம் அடைந்தன.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக 25 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. சூறைக்காற்றால் ஏராளமான வாழைகள் சேதம் அடைந்தன.
புயல் சின்னம்
வங்கக்கடலில் உருவான ‘உம்பன்‘ புயல் காரணமாக குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்றுடன் சீற்றம் ஏற்பட்டுள்ளது. உம்பன் புயல் தற்போது தீவிர புயலாக மாறி உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினம் புத்தன்துறை, குறும்பனை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் சீற்றம் காரணமாக வீடுகளை கடல்நீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடல் சீற்றம்
கன்னியாகுமரியில் நேற்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதிகாலை முதல் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசியதால் 10 அடி முதல் 15 அடி உயர ராட்சத அலைகள் எழுந்து கரையில் உள்ள பாறைகளில் மோதி சிதறியது. கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, சிலுவைநகர், புதுகிராமம், கோவளம், கீழ மணக்குடி, மணக்குடி உள்பட 12-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த வள்ளம், கட்டுமர மீனவர்கள் 25 ஆயிரம் பேர் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
தற்போது கிழக்கு கடற்கரையில் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகுகள் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளன. வள்ளம், கட்டுமரங்களை அந்தந்த கிராமங்களில் உள்ள மேடான பகுதிகளுக்கு கொண்டு சென்று மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தினர்.
மீன் சந்தை வெறிச்சோடியது
மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை கிராமங்களில் உள்ள மீன் மார்க்கெட்டுகள் வெறிச்சோடி காணப்பட்டன. நகர் பகுதிகளிலும் மீன் வரத்து இல்லாததால் மீன்கள் கிடைக்காமல் மீன் பிரியர்கள் திண்டாடினர். கொரோனா ஊரடங்கு ஒரு புறம் இருக்க புயல் சின்னம் காரணமாக சூறைக்காற்று வீசி வருவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சூறாவளி காற்று வீசியதால் சாலைகளில் புழுதியை வாரி தூற்றியது. ஆங்காங்கே மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. கன்னியாகுமரி அருகே கொட்டாரம் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வாழை பயிர் செய்திருந்தனர். நேற்று அப்பகுதியில் வீசிய சூறாவளி காற்றில் 1000-க்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி பகுதியில் நேற்று முன்தினம் இரவிலிருந்து பலத்த சூறை காற்று அடித்து வருகிறது. இதனால் மரங்கள் ஒடிந்தன. கூரைகள் பறந்தன. சீதப்பால் சந்திப்பில் மெயின் ரோட்டோரம் நின்ற பனை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து அருகில் உள்ள டிரான்ஸ்பார்மர் மீது விழுந்தது.
இதில் 4 மின் கம்பங்கள் உடைந்தன. டிரான்ஸ்பார்மரும் சேதம் அடைந்தது. தகவல் கிடைத்ததும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து உடைந்த மின் கம்பத்தை மாற்றி புது மின் கம்பத்தை அமைத்தும், சேதமடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்து வருகின்றனர். இந்த பணியால் சீதப்பால் மற்றும் அத ன்சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
சாமி தோப்பு
சாமிதோப்பு பகுதியில் சூறைக்காற்று வீசியது. இதனால் ஈத்தங்காடு அருகில் உள்ள உசர விளைக்கு செல்லும் சாலையில் தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்தப் பகுதியில் சென்ற மின்சார கம்பிகளும் அறுந்து விழுந்தது. அதைத்தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. உடனடியாக கொட்டாரம் இளம்நிலை மின்வாரிய அலுவலக அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அறுந்து விழுந்த மின் கம்பியை சீரமைத்தனர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் மரத்தை வெட்டி அகற்றி போக்குவரத்தையும் சீர் செய்தனர்.
மரம் வேரோடு சாய்ந்தது
நாகர்கோவிலில் ஒழுகினசேரி பாலத்திலிருந்து சுடுகாடு செல்லும் சாலையில் இருந்த தென்னை மரம் வேரோடு அருகே இருந்த மின்கம்பம் மீது சாய்ந்தது. இதனால் மின் கம்பம் கீழே விழுந்து சேதமடைந்தது. தென்னை மரமும், மின்கம்பமும் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்தன. இதைப் பார்க்கும்போது சாலையில் திடீர் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது போல இருந்தது. மேலும் மின் கம்பிகளும் அறுந்தன. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் யாரும் செல்லாததால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதை தொடர்ந்து மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய ஊழியர்கள் அங்கு வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு சென்று மின் கம்பிகள் மீது கிடந்த தென்னை மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பிறகு மின்கம்பத்தை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிக்னல் சேதம்
இதேபோல கன்னியாகுமரி செல்லும் சாலையில் இருந்து கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலை சந்திப்பில் ஒரு மரம் திடீரென விழுந்தது. இதனால் அங்கிருந்த போக்குவரத்து சிக்னல் சேதமடைந்தது. மேலும் போக்குவரத்தும் தடைபட்டது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றினர். அதன் பிறகு அங்கு போக்குவரத்து சீரானது.