கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூருக்கு அரசு ஊழியர்களுக்காக சிறப்பு பஸ் இயக்கம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கிருஷ்ணகிரி,
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் நேற்று முதல் பணிக்கு திரும்ப திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு பஸ் நேற்று காலை 8 மணிக்கு கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்த அரசு ஊழியர்கள் 8 பேருடன் 8.30 மணிக்கு திருப்பத்தூர் புறப்பட்டது. வழியில், பர்கூர், கந்திலி ஆகிய இடங்களில் காத்திருந்த அரசு ஊழியர்கள் என மொத்தம் 15 பேரை ஏற்றிக் கொண்டு திருப்பத்தூர் சென்றது. அங்கிருந்து இரவு 7 மணிக்கு அரசு ஊழியர்களை அழைத்துக் கொண்டு சிறப்பு பஸ் கிருஷ்ணகிரி வந்தது.
முன்னதாக ஊழியர்களின் அடையாள அட்டையை சரி பார்த்து, டிக்கெட் வழங்கிய பின்னர் கிருமி நாசினியால் கையை சுத்தம் செய்து ஒரு சீட்டில் ஒருவர் என அமர வைக்கப்பட்டனர். மேலும் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் முககவசம் அணிந்திருந்தனர். இதுவரை திருப்பத்தூருக்கு மோட்டார்சைக்கிளில் சென்று வந்த அரசு ஊழியர்கள், நேற்று முதல் அரசு பஸ்சில் பயணம் செய்ததால், மகிழ்ச்சி அடைந்தனர்.