ஸ்கூல் ஆப் காமர்ஸ் கல்லூரி புதிய கட்டிட திறப்பு விழா: பிரதமர் மோடியை அழைக்க முடிவு - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தகவல்
ரூ.166 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஸ்கூல் ஆப் காமர்ஸ் கல்லூரி புதிய கட்டிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார்.
பெங்களூரு,
பெங்களூரு பல்கலைக்கழக வளாகத்தில் “அம்பேத்கர் ஸ்கூல் அப் எக்கனாமிக்ஸ்” கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டுமான பணிகளை துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று நேரில் வந்து பார்வையிட்டார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
“பெங்களூரு பல்கலைக் கழக வளாகத்தில் இந்த ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் கல்லூரிக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடையும். வேறு கட்டிடத்தில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
எங்களின் குறிக்கோள்
ரூ.166 கோடி செலவில் இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைக்க முடிவு செய்துள்ளோம். ஐ.ஐ.எம். போன்ற அமைப்புகளுக்கு நிகராக இந்த ஸ்கூல் ஆப் காமர்ஸ் கல்லூரியை தரம் வாய்ந்ததாக நடத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
உலக அளவில் இந்த கல்வி நிறுவனம் பெயர் பெற வேண்டும் என்பது எங்களின் குறிக்கோள். இங்கு படிக்கும் மாணவர்களுக்கு தரமான கல்வி போதிக்கப்படுகிறது. இங்கு பணியாற்றும் ஆசிரியர்களும் திறமையானவர்கள். கற்றலில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் தானாகவே பதிவாகும் தொழில்நுட்பம் இருக்கிறது.”
இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.