மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வான உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர் பதவி ஏற்பு
மராட்டிய மேல்-சபைக்கு போட்டியின்றி தேர்வான உத்தவ் தாக்கரே உள்பட 9 பேரும் எம்.எல்.சி.க்களாக பதவி ஏற்றனர்.
மும்பை,
மராட்டிய மேல்-சபையில் கடந்த மாதம் 24-ந் தேதியுடன் 9 எம்.எல்.சி. பதவிகள் காலியாகின. இதையடுத்து புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய அன்றைய தினம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
எம்.எல்.ஏ.வாகவோ அல்லது எம்.எல்.சி.யாகவோ இல்லாமல் முதல்-மந்திரி ஆன நிலையில், எம்.எல்.சி. தேர்தல் தள்ளிப்போனதால் உத்தவ் தக்கரேயின் பதவி ஊசலாடியது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்துக்கு மத்தியில், அவர் தனது முதல்-மந்திரி பதவியை காப்பாற்றி கொள்ள போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் தேர்தல் கமிஷனை கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கேட்டுக்கொண்டதால் வருகிற 21-ந் தேதிக்கு அந்த பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவிக்கு நீடித்து வந்த ஆபத்து நீங்கியது.
வேட்பாளர்கள்
எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே, அக்கட்சியை சேர்ந்த தற்போதைய மேல்-சபை துணை தலைவர் நீலம் கோரே மற்றும் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் சார்பில் சசிகாந்த் ஷிண்டே, அமோல் மித்காரி, காங்கிரஸ் சார்பில் ராஜேஷ் ரத்தோடு ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பில் ரஞ்சித்சிங் மோகிதே பாட்டீல், கோபிசந்த் பாடல்கர், பிரவீன் தட்கே, ரமேஷ் கராட் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
பதவி ஏற்பு
9 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் உத்தவ் தாக்கரே உள்பட அனைவரும் போட்டியின்றி எம்.எல்.சி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதன் காரணமாக 21-ந் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தல் அவசியம் இல்லாமல் போனது. இந்தநிலையில், நேற்று தென்மும்பையில் உள்ள சட்டசபையில் நடந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட 9 பேரும் எம்.எல்.சி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை நேரில் சந்தித்து, எம்.எல்.சி. தேர்தல் நடக்க உதவிய அவருக்கு நன்றி தெரிவித்தார்.